ஹர்ஷா கொலையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி இந்து அமைப்பினர் தர்ணா போராட்டம்

ஹர்ஷா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி சிவமொக்கா கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-07 20:27 GMT
சிவமொக்கா:

பஜ்ரங்தள பிரமுகர் கொலை

  சிவமொக்கா நகர் சீகேஹட்டி பகுதியில் கடந்த 20-ம் தேதி இரவு பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தின்போது பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பத்தை தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். ஹர்ஷா கொலை வழக்கில் 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதற்கிடையே ஹர்ஷா கொலையை கண்டித்தும், இந்த வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

  இந்த நிலையில் ஹர்ஷா கொலையில் குற்றவாளிகளும் கடும் தண்டனை வழங்க கோரி சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பஜ்ரங்தள, விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது அவர்கள் கழுத்தில் காவி துண்டும், கையில் காவி கொடி ஏந்தியும் இருந்தனர். பின்னர் இதுதொடர்பாக அவர்கள், கலெக்டர் செல்வமணியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், ஹர்ஷா கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

பரபரப்பு

  அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்