ஈமு கோழிப்பண்ணை தொடங்க உதவுவதாக மோசடி:4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஈமு கோழிப்பண்ணை தொடங்க உதவுவதாக கூறி மோசடி செய்த 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2022-03-07 20:20 GMT
மதுரை,

ஈமு கோழிப்பண்ணை தொடங்க உதவுவதாக கூறி மோசடி செய்த 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ரூ.4 கோடி மோசடி

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீ ராமபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஈமு கோழிப்பண்ணை வைக்க உதவி செய்வதாக கூறி தனது நிறுவனத்தின் மூலம் பலரிடம் பணம் வசூலித்தார். இந்த வகையில் சுமார் 177 பேரிடம் ரூ.4.69 கோடியை வசூலித்துள்ளார். ஆனால் உறுதியளித்தபடி செய்து தரவில்லை. இதுதொடர்பாக பலரும் புகார் அளித்துள்ளனர். ஆனால் 2 பேருக்கு மட்டும் ரூ.4.5 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார். மற்றவர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் சுமார் ரூ.4 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவம், அவரது நிறுவனத்தில் பணியாற்றிய பன்னீர்செல்வம், ரவி பாலன், இவருடைய அண்ணன் ரமேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு மதுரையில் உள்ள பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், பரமசிவம், பன்னீர்செல்வம், ரவிபாலன், ரமேஷ்குமார் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார். மேலும் பரமசிவத்திற்கு ரூ.2.20 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.2.40 லட்சமும் அபராதம், விதிக்கப்பட்டது. மேலும் பரமசிவத்தின் நிறுவனத்திற்கு தனியாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்