2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு பிறகு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் அளித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு பிறகு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு நடைமுறைப்படுத்தியது.
அதன்படி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆகியவை ஒத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் ஜனவரி 26-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே இருந்தது.
2 மாதங்களுக்கு பிறகு
இருந்தாலும் திங்கட்கிழமை தோறும் மக்கள் பலர் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. அந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை மக்கள் போட்டுவிட்டு சென்றனர்.தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததுடன், கொரோனா தொற்று பரவலும் குறைந்துவிட்டது. இதனால் மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு பிறகு தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
கோரிக்கை மனுக்கள்
கூட்டத்தில் விவசாயிகள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயிர்க்கடன், பட்டா, மாற்றுதிறனாளிக்கான உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்களை பெற்று கொண்ட அவர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.