அ.தி.மு.க. வேர் இல்லாத மரம்போல் மாறிவிட்டது-முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ்
அ.தி.மு.க. தற்போது வேரில்லா மரம்போல் மாறிவிட்டது என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கூறினார்.
ராமநாதபுரம்,
அ.தி.மு.க. தற்போது வேரில்லா மரம்போல் மாறிவிட்டது என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கூறினார்.
கோர்ட்டில் ஆஜர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணி போட்டியிட்டபோது பேனர் வைத்தது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது திருவாடானை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், கருணாஸ் நேற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.1 கோர்ட்டில் ஆஜரானார்.
வேரில்லா மரம்
அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி சிட்டிபாபு வழக்கினை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். முன்னதாக கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் நிலை குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம், கங்கையே சூதகமானால் எங்கு குளிப்பது என்பது போல ஆகிவிட்டது. மக்கள் நன்றாக இல்லை. சேவை செய்வதற்காகத்தான் அரசியல். ஆனால், அரசியல் இன்று தொழிலாக மாறிவிட்டது. சேவைக்கான அரசியல் சூழ்நிலை தற்போது இல்லை. ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க. வேரில்லாத மரமாக மாறிவிட்டது.
இதேநிலை நீடித்தால் தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அ.தி.மு.க. தொண்டர்களை தங்கள் பக்கம் பிரித்து கொண்டுவிடுவார்கள். அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெற அதிகாரமிக்க, ஆளுமைமிக்க ஒரு தலைமை தேவைப்படுகிறது. குடும்பத்திற்கே தலைமை தேவைப்படும்போது மிகப்பெரிய இயக்கத்திற்கு தலைமை சரியில்லை என்றால் நன்றாக இருக்காது. சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்து கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவாக இருக்க வேண்டும். ஆளுக்கொருவர் கைகாட்டும் நிலை இருக்ககூடாது. அப்போதுதான் சரியாக இருக்கும். 6 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு, தற்போது அதைவிட்டு ஒதுங்கி எனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறேன். தற்போது 6 படங்களில் நடித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.