பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் கட்டிடம் தரைமட்டமானது.

Update: 2022-03-07 20:01 GMT
தாயில்பட்டி, 
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் கட்டிடம் தரைமட்டமானது.
பட்டாசு ஆலை 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பிரம்மன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சிவகாசி அருகே உள்ள மேலஒட்டம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 80-க்கும் மேற்பட்ட அறைகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று மாலை பேன்சி ரக வெடிக்கு மருந்து செலுத்தும் போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கட்டிடம் தரைமட்டமானது. 
தொழிலாளி பலி 
அந்த கட்டிடத்தில் பணிபுரிந்த சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த கணேசன் (25) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் அங்கு பணிபுரிந்த சாத்தூர் அமீர் பாளையத்தைச் சேர்ந்த ராமர் (19), பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி மணிகண்டன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
இந்த வெடிவிபத்து குறித்து தாசில்தார் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் சாரதாதேவி, வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், ராமசாமி, ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலஒட்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அரிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்