சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது

9, 10 தேதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது

Update: 2022-03-07 19:56 GMT
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலை முதல் காரைக்குறிச்சி வரையுள்ள சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள், கடைகளுக்கு முன்பு கொட்டகைகள் போன்று பல்வேறு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஆக்கிரமிப்பு கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். அதில், ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவகாசம் முடிந்த பின்னரும் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பை அளந்து எல்லை குறித்தனர். இந்தப்பணியில் நெடுஞ்சாலை துறை பொறியாளர் விக்னேஷ் ராஜ், தா.பழூர் கிராம நிர்வாக அதிகாரி அய்யப்பன், நில அளவையர் அன்பு மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். எல்லை குறிக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் 9-ந் தேதி, 10-ந் தேதி அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்