சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரம்
ஆலத்தூர் தாலுகா பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.;
பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் அதிகஅளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. சின்ன வெங்காயம் பயிரிட்டு 90 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படுகிறது.
அதன்படி இரூர், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடை பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் வயல்களில் குவியல், குவியலாக காய வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வேதனை
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும்போது அதன் விளைச்சல் ஒரு மடங்கு என்றால், அதற்கு ஆகும் செலவு மூன்று மடங்கு அளவுக்கு உள்ளது. அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அதன் தரத்திற்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே கேட்கப்படுகிறது. இது, எங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகிறது. வங்கியில் வாங்கிய கடனை சரிவர கட்ட முடியவில்லை. ஆகவே, கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.