வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு மீது கல்வீச்சு, ஆட்டோ உடைப்பு.
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு மீது கல்வீச்சு, ஆட்டோ உடைப்பு.
வாணியம்பாடி
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் சோபியா. இவரது வீடு இந்திரா நகர் பகுதியில் உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் போது அப்பகுதியில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருதரப்புக்கு ஆதரவாக சோபியா பேசியதாக கூறி, நேற்று காலை 10 மணி அளவில் 20-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சோபியா வீடு மீது சரமாரியாக கல்வீசி தாக்கியுள்ளனர்.
மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சோபியாவின் கணவர் நவீன் குமாருக்கு சொந்தமான ஆட்டோவையும் அடித்து உடைத்துள்ளனர், இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதேபோல் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (29) என்பவரை வழிமறித்த அந்த பகுதியை சேர்ந்த முனிராஜ், அப்பு, பிரசாந்த் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் முன்விரோதம் காரணமாக அவரை கத்தியால் தலையில் வெட்டியும், உருட்டு கட்டையால் அடித்தும் உள்ளனர்.
படுகாயமடைந்த சரவணன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.