ரூ.16 கோடியில் 940 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.16 கோடி மதிப்பில் 940 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.16 கோடி மதிப்பில் 940 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.16 கோடி மதிப்பில் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள், பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதியுதவி வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல், அடுக்குமாடி குடியிருப்பு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என்பது உள்ளிட்ட 940 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 9 மாதங்களாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு பணியாற்றுகின்ற முதல்-அமைச்சரை நாம் பெற்று இருக்கின்றோம். அவர் எப்போது தூங்குகின்றார், எப்போது விழித்து இருக்கின்றார் என்று எங்களை போன்ற சக அமைச்சர்களுக்கே தெரியவில்லை.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முதல்-அமைச்சர் என்னை தொலைபேசியில் அழைத்தார். அப்போது அவர் தேர்தல் குறித்து பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் மதுரையில் நூலகம் கட்டும் பணி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்று கேட்டார்.
மக்களாட்சி
குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை முடிப்பீர்களா என்று இரவில் கேட்கிறார் என்றால் முதல்-அமைச்சர் தூங்குவதே இல்லை என்று தான் அதற்கு பொருளாக எடுத்து கொள்ள முடியும். ஜனநாயக ரீதியாக சொல்ல வேண்டும் என்றால் இப்போது தான் மக்களாட்சி நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
தமிழ்நாட்டில் குடிசையில் இல்லா நிலை உருவாக்க வேண்டும். அனைவரும் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் நடுநிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்- அமைச்சர் செயல்பட்டு வருகின்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணிகலைமணி, அன்பரசி ராஜசேகரன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன், துணை இயக்குனர் சுகாதார செல்வகுமார், திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.