வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது
வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று போளூர் தாலுகாவில் உள்ள களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை
வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று போளூர் தாலுகாவில் உள்ள களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதி சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
இதில் 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நடவடிக்கை எடுக்கக்கூடாது
கூட்டத்தில் போளூர் தாலுகா களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 89 கான்கிரீட் வீடுகள் உள்ளன. நாங்கள் 3 தலைமுறையாக அந்த பகுதியில் வசித்து வருகின்றோம். தற்போது நாங்கள் இருக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி எங்கள் வீடுகளை காலி செய்ய அரசு தரப்பில் கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.
எங்கள் குடும்பத்தினர் யாரும் அரசு வேலையிலோ, நிரந்தர ஊதிய பணியிலோ இல்லை. அனைவரும் கூலி தொழில் தான் செய்து வருகின்றோம். எங்களால் வேறு இடத்தில் வீடு கட்டவோ, குடிபெயர்ந்து செல்லவோ வசதியில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், அரசின் சொத்துக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி வசித்து வருகின்றோம். எனவே எங்களது வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.