பஸ்கள் நின்று செல்லாததால் சாலை மறியல்
கண்ணமங்கலம் அருகே பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரியும், அனைத்து பஸ்களும் நின்று செல்ல வலியுறுத்தியும் சாலை மறியல் நடந்தது. இதனால் 2 மணி நேரம்போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.;
ஆரணி
கண்ணமங்கலம் அருகே பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரியும், அனைத்து பஸ்களும் நின்று செல்ல வலியுறுத்தியும் சாலை மறியல் நடந்தது. இதனால் 2 மணி நேரம்போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
பஸ் வசதி இல்லை
வேலூர் - திருவண்ணாமலை சாலையில் கண்ணமங்கலம் சந்தவாசல் இடையே உள்ள பெரிய அய்யம்பாளையம் ஏரிக்கரை அருகே காந்தி நகர் உள்ளது.
இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இந்திரா நகர், சின்ன அய்யம்பாளையம், சோமந்தாங்கல், பாளைய ஏகாம்பரநல்லூர், காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்து செல்கின்றனர். பள்ளி நேரங்களில் போதிய பஸ்வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனால் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை எனவும், போளூரிலிருந்து கண்ணமங்கலம் செல்லும் தடம் எண் பி6 டவுன் பஸ் மட்டும் நின்று செல்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த பஸ் போளூரில் இருந்து வரும்போதே அதிக அளவில் பயணிகளை ஏற்றி வருவதால் மாணவ- மாணவிகள் பஸ்சில் ஏற முடியாமல் அவதிக்கு ஆளாகிறார்கள்.
சாலை மறியல்
நேற்றும் வழக்கம்போல் பஸ்சில் ஏற முயன்ற போது ஒரு மாணவன் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ -மாணவிகளும், பொதுமக்களும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஆரணி தாசில்தார் க.பெருமாள், போளூர் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் சீனிவாசன் ஆகியோர் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எழுத்து பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் என மாணவர்கள் கூறியதை தொடர்ந்து, மேலாளர் சீனிவாசன் அனைத்து அரசு பஸ்களும் காந்தி நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும் என எழுதி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மாணவர்களும், பொதுமக்களும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் வேலூர்- திருவண்ணாமலை சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.