பேத்தி பிறந்தநாள் விழாவுக்கு அழைக்காததால் முதியவர் தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே பேத்தி பிறந்தநாள் விழாவுக்கு அழைக்காததால் மனமுடைந்த தாத்தா மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-07 18:56 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே பேத்தி பிறந்தநாள் விழாவுக்கு அழைக்காததால் மனமுடைந்த தாத்தா மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

என்னை ஏன் அழைக்கவில்லை?

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தரபள்ளி புதுகுடியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65). இவரின் மனைவி கனகு. இருவரும் வீட்டில் பீடி சுற்றி வந்தனர்.

 இவர்களுக்கு தேவன், தென்னரசு என்ற பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் ராமகிருஷ்ணனும், கனகுவும் தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த 2-ந்தேதி தென்னரசுவின் மகளுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடி உள்ளனர். 3-ந்தேதி ராமகிருஷ்ணன் தனது பேத்தியின் பிறந்தநாள் விழா தகவலை கேள்விப்பட்டு, என்னை‌ ஏன் அழைக்கவில்லை? என்று தனது மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதற்குமேல் பிழைக்க மாட்டேன்

அதில் மனவேதனை அடைந்த ராமகிருஷ்ணன் பச்சூர் அருகே மேலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானத்தை வாங்கி, அதில் விஷத்தை கலந்து குடித்து விட்டு தனது நண்பரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, நான் இதற்குமேல் பிழைக்க மாட்டேன், மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டேன், எனக்‌ கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். 

அதிர்ச்சி அடைந்த நண்பர், உடனடியாக அவரின் மகன் தேவனுக்கு தகவல் தெரிவித்து, இருவரும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு மயக்கமடைந்து கிடந்த ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நேற்று காலை ராமகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தென்னரசு நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பேத்தியின் பிறந்தநாள் விழாவுக்கு தன்னை அழைக்காததால் மனமுடைந்த தாத்தா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்