ஆற்காட்டில் தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
ஆற்காட்டில் தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.;
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை அண்ணாநகர் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே தலைமை ஆசிரியையாக இருந்த கீதா பல்வேறு புகார்களின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது வாலாஜா ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் அவர் ஆற்காடு அண்ணாநகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டு தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றுள்ளார். இதனை கண்டித்தும் அவரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியின் முன்பு பதாகைகளை ஏந்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆற்காடு வட்டார கல்வி அலுவலர் ஆசீர்வாதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதன்பேரில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.