தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-07 17:53 GMT
புதுக்கோட்டை
இணைப்பு சாலை அமைக்கப்படுமா? 
பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தையில் நடைபெறுவதால் இருபுறமும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உழவர் சந்தை எளம்பலூர் சாலையை இணைக்கும் வகையில் உழவர் சந்தை அருகே தார் சாலை அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினால் வடக்கு மாதவியின் சாலையிலிருந்து நகருக்கு மற்றும் வெளி பகுதிகளுக்கு சென்று வரும் வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். இதனை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுமக்கள், உழவர் சந்தை, பெரம்பலூர்.

விபத்தை தடுக்க வேகத்தடை வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, பொன்னமராவதி பாப்பாயி மருத்துவமனையிலிருந்து பஸ் நிறுத்தம் வரை சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் சாலையை கடக்க முயல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மீனாட்சிசுந்தரம், உலகம்பட்டி, புதுக்கோட்டை.

ஆபத்தான மின்கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், குடுமியான்மலையை அடுத்த கைவேலிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசும்போது  மின்சார கம்பங்கள்  முறிந்து கீழே விழுந்தால் மின்சார தடை ஏற்படுவது மட்டும் இன்றி அப்போது அந்த வழியாக  செல்லும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையும் உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குடுமியான்மலை, புதுக்கோட்டை. 

குண்டும், குழியுமான சாலை 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மகாதானபுரம் ஊராட்சி பகுதியில் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பழைய ஜெயங்கொண்டசோழபுரம், கரூர். 

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், ஆமணக்கம்பட்டி கிராமம், தாதக்கவுண்டம்பட்டி  மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சமைக்கவோ, அன்றாட தேவைக்கோ குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தாதக்கவுண்டம்பட்டி, திருச்சி. 

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத காரணத்தினால் கர்ப்பிணிகள், முதியவர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு செல்ல சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இருங்களூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பிச்சாண்டார்கோவில் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
காயத்ரி, பிச்சாண்டார்கோவில், திருச்சி. 

ஆபத்தான மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், மருகாபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சியில் உள்ள துவரங்குறிச்சி-உடையாம்பட்டி சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. சாலையில் வாகனங்கள் செல்லும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படுவதுடன்  உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிதிலடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு அதற்குப்பதில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
திருப்பதி, உடையாம்பட்டி, திருச்சி. 

மேலும் செய்திகள்