குடிசை தீப்பிடித்து 6 ஆடுகள் செத்தன

குடிசை தீப்பிடித்து 6 ஆடுகள் பரிதாபமாக செத்தது.

Update: 2022-03-07 17:52 GMT
கரூர்
நொய்யல்
தவுட்டுப்பாளையம் அருகே கட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முபாரக் அலி. இவரது மகள் ஐய்சாபானு (25). இவர்  இரவு தனது குடிசையில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி அளவில் திடீரென குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐய்சாபானு மற்றும் குடும்பத்தினர் பதறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் பயன் இல்லை. 
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த துணிமணிகள், உணவுப் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் ஐய்சாபானு தனது குடிசை அருகே கட்டி வைத்திருந்த அவருக்கு சொந்தமான 6 ஆடுகள் தீயில் கருகி செத்தன. மேலும் 8 ஆடுகள் படுகாயம் அடைந்தன. இதைக்கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் நகராட்சித்தலைவரும், கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளருமான சேகர் என்கிற குணசேகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கினார். 

மேலும் செய்திகள்