வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து போலி சேவை மைய எண் மூலம் எடுக்கப்பட்ட ரூ18 ஆயிரம் மீட்பு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து போலி சேவை மைய எண் மூலம் எடுக்கப்பட்ட ரூ18 ஆயிரம் மீட்டு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்

Update: 2022-03-07 17:50 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய வங்கி கணக்கில் இருந்து அனுமதியின்றி ரூ.2,000 எடுக்கப்பட்டது. இது தொடர்பாக இணையதளம் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தை கார்த்திக் அணுகினார். அப்போது போலி எண் மூலம் கார்த்திக்கின் வங்கி கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர், சைபர் கிரைம் போலீசாருக்கு இணையதளம் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் எடுக்கப்பட்ட பணம் மூலம் ஒரு புரொஜெக்டர் கருவியை வாங்க பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இணையதளம் மூலம் அந்த எந்திரத்தை வாங்குவதற்கான பதிவை சைபர் கிரைம் போலீசார் ரத்து செய்தனர். இதனால் ரூ.18 ஆயிரம் 48 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இந்த தொகையை தர்மபுரியில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், கார்த்திக்கிடம் வழங்கினார். இது போன்ற பணமோசடி குறித்த புகார்களை தெரிவிக்க 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை  தொடர்பு கொள்ள வேண்டும். www.cybercrime.org.in என்ற இணையதளத்திலும் புகார் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்