தர்மபுரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பேரறிவாளன்

தர்மபுரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.

Update: 2022-03-07 17:50 GMT
தர்மபுரி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் சிறுநீரக நோய்த்தொற்று, நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு உரிய சிகிச்சை பெற பரோல் வழங்க வேண்டும் என்ற பேரறிவாளனின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு அவருக்கு பரோல் வழங்கியது. இந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு நோய் பாதிப்பு தொடர்பாக ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், மருத்துவ ஆலோசனைகள் பெறவும் பேரறிவாளன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தர்மபுரியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்திற்கு நேற்று மதியம் 12.20 மணிக்கு வந்தார். அவரை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், போலீசார் அடங்கிய குழுவினர் போலீஸ் வேனில் உரிய பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அந்த ஸ்கேன் மையத்தில் அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக அங்கிருந்து மத்திய கூட்டுறவு வங்கி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிறுநீரக சிகிச்சை பிரிவு டாக்டர் மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பேரறிவாளன் மீண்டும் ஸ்கேன் மையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் நேற்று மதியம் 3.15 மணிக்கு பேரறிவாளன் அங்கிருந்து ஜோலார்பேட்டைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்