பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி தொடக்கம்
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை கலெக்டர் திவ்யதர்சினி நேற்று தொடங்கி வைத்தார்.
பாலக்கோடு:
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை கலெக்டர் திவ்யதர்சினி நேற்று தொடங்கி வைத்தார்.
கரும்பு அரவை பணி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திம்மனஅள்ளியில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-2022-ம் ஆண்டு கரும்பு அரவை மற்றும் இணைமின் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி கரும்பு அரவை பணி மற்றும் இணைமின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சங்கர் வரவேற்றார். செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.அன்பழகன், ஜி.கே.மணி, கோவிந்தசாமி, வெங்கடேவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கலெக்டர் திவ்யதர்சினி கூறியதாவது:-
1.03லட்சம் குவிண்டால் இலக்கு
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய 2 ஆண்டுகள் வறட்சி காரணமாக கரும்பு அரவை செய்யப்படவில்லை. தமிழக முதல்-அமைச்சர் ஆணையின்படி இந்த சர்க்கரை ஆலையில் 2021-2022-ம் ஆண்டு கரும்பு அரவை பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-2022 அரவை பருவத்திற்கு 3,422 ஏக்கர் கரும்பு பதிவு செய்து சுமார் 1.02 டன்கள் கரும்பு அரவை மேற்கொள்ளவும், 1.03 லட்சம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணைமின் நிலையத்தின் மூலம் ஆலை அரவை பருவத்தில் தினசரி 9.31 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் 3.02 மெகா வாட் மின்சாரம் ஆலை பயன்பாட்டிற்கும் மீதமுள்ள 6.29 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சுத்தமான கரும்பு
கரும்பு தோட்டங்களில் இருந்து ஆலை அரவைக்கு கரும்பை கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 48 லாரிகளும், 50 டிராக்டர்களும், 14 டிப்பர்களும், 26 மாட்டு வண்டிகளும் ஈடுபடுத்தப்பட உள்ளன. எனவே அனைத்து விவசாயிகளும் சுத்தமான கரும்பை வெட்டி ஆலை அரவைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், கரும்பு ஆலை தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் சம்பங்கி, தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, ஆலையின் நிர்வாக இயக்குனர்கள், அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.