திருவண்ணாமலையில் யூரியா தட்டுப்பாடு

திருவண்ணாமலையில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

Update: 2022-03-07 17:49 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

யூரியா தட்டுப்பாடு

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக திருவண்ணாமலை மாவட்டம் நெல் உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. 

மேலும் இந்த மாவட்டத்தில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. 

இதனால் வழக்கத்தைவிட சம்பா சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு உள்ளனர். 
அதேபோல் கரும்பு விவசாயிகளும் கரும்பு நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

வழக்கமாக நெல் நடவு நட்ட 15 நாட்களுக்கு பிறகு நெற்பயிரில் நோய் தாக்குதல் வராமல் இருக்கவும், மகசூல் அதிகரிக்கவும் பயிர்களுக்கு யூரியா போடுவது வழக்கம். 

அதேபோல் கரும்பு நடவு செய்த ஒரு மாதத்திற்குள் யூரியா போட வேண்டும். ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் யூரியா கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். 
மேலும் யூரியா வாங்குவதற்காக விவசாயிகள் தனியார் உரக்கடைகள் முன்பு திரண்டு உள்ளனர். 

திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான கடைகளில் நேற்று விவசாயிகள் யூரியா வாங்குவதற்காக உரக்கடைகளின் முன்பு நீண்ட வரிசையில் நின்றனர்.

வேலைநிறுத்தத்தால் தட்டுப்பாடு

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் கூறியதாவது:- ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது அதிக அளவில் நெல் பயிரிட்டு உள்ளனர். 

தற்போது நெல் பயிருக்கு அதிக அளவில் யூரியா தேவை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு யூரியாவின் நிறுவனத்தில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மேலும், வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய யூரியாவும் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. நிலவி வரும் யூரியா தட்டுப்பாட்டை போக்க சென்னை மணலியில் இருந்து 1,689 டன் யூரியா திருவண்ணாமலைக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு 100 டன் கூட்டுறவு சங்கங்களுக்கும், மீதமுள்ள 1,589 டன் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

விவசாயிகள் தங்களுக்கு தேவையான அளவு உரங்களை மட்டுமே வாங்க வேண்டும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேவைக்கு அதிகமாக வாங்குவதை தவிர்க்க வேண்டும். 

திரவ நிலை யூரியா

மேலும் கடைகளில் யூரியா உரம் கிடைக்காத விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரவ நிலையில் உள்ள யூரியாவை வாங்கி பயன்பெறலாம். 

இது மாவட்டத்திற்கு தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்