கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

அரசியல் அறிவியல் பிரிவுக்கு பேராசிரியர் நியமிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-07 17:49 GMT
செய்யாறு

அரசியல் அறிவியல் பிரிவுக்கு பேராசிரியர் நியமிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 செய்யாறு அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு-ஆற்காடு சாலையில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. 

இந்த கல்லூரியில் காலை, மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் இளநிலை மற்றும் முதுநிலையில் 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு அரசியல் அறிவியல் (பொலிட்டிகல் சயின்ஸ்) பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த பாடப்பிரிவுக்கு என்று தனியாக  பேராசிரியர்  நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தற்போது முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு என 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 
3 ஆண்டுகளாக தங்களுக்கென்று அரசியல் அறிவியல் பிரிவுக்கு பேராசிரியர் நியமிக்காமல் மற்ற துறைகளில் உள்ள ஆசிரியர்களை கொண்டு தங்களுக்கு பாடம் நடத்தி வருவதாகவும், அதுவும்  ஆசிரியர்கள் சரிவர தங்கள் வகுப்பிற்கு வராமல் மாணவர்கள் வெறுமென வகுப்பில் அமர்ந்து விட்டு வீட்டிற்கு செல்லும் நிலையில் உள்ளதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.

 சாலை மறியல்

இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் பலமுறை முறையிட்டும் பேராசிரியர் நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் இந்த ஆண்டு கல்லூரி படிப்பு முடிக்கும் மாணவர்கள் தேர்வில் என்ன எழுதுவது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 

எனவே, அரசியல் அறிவியல் பாடப்பிரிவுக்கு நிரந்தர பேராசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலையில் மாணவர்கள் செய்யாறு-ஆற்காடு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர்.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 தர்ணா போராட்டம்

சாலை மறியலை கைவிட்ட மாணவர்கள் கல்லூரி முதல்வர் நிரந்தர பேராசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என கல்லூரி நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்