ரெயிலில் 32 மணி நேரம் உணவு தண்ணீர் இன்றி பயணம் செய்தோம் உக்ரைனில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மாணவி உருக்கம்

ரெயிலில் 32 மணி நேரம் உணவு தண்ணீர் இன்றி பயணம் செய்தோம் என்று உக்ரைனில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மருத்துவ மாணவி உருக்கமாக தெரிவித்தார்.

Update: 2022-03-07 17:48 GMT
குருபரப்பள்ளி,:
ரெயிலில் 32 மணி நேரம் உணவு, தண்ணீர் இன்றி  பயணம் செய்தோம் என்று உக்ரைனில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மருத்துவ மாணவி உருக்கமாக தெரிவித்தார்.
மருத்துவ மாணவி
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் மருத்துவம் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, மாணவர்களும் இதில் உள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த மருத்துவ மாணவி அஸ்வினி ராஜ் (வயது 21) என்பவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.
சிரமம்
பின்னர் அவர் கூறுகையில்,  நான் உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். உக்ரைனில் கார்கிவ் நகரில் போர் தொடங்கியது முதல் நாங்கள் பெரும் சிரமப்பட்டோம். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவன் போரில் உயிரிழந்த போது அந்த பகுதியில் தனித்தனியாக இருந்தோம். பல நாட்கள் உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்தோம். இந்திய மாணவர்கள் ரெயிலில் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதிலும் சிரமம் இருந்தது. இறுதியாக, கிடைத்த ரெயிலில், 32 மணி நேரம் உணவு, தண்ணீர் இல்லாமல் பயணித்து, அதன்பின் மிகவும் சிரமப்பட்டு இந்தியா வந்தோம் என்றார். 
31 பேர் இதுவரை மீட்பு
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து உக்ரைன் நாட்டில் படிக்க சென்ற 41 மாணவ, மாணவிகளில் இதுவரையில் 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்