பொய்கை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை செயதுவிட்டு ஏலம் விடவேண்டும். ஏலதாரர்கள், அதிகாரிகளை முற்றுகை

பொய்கை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை செயதுவிட்டு ஏலம் விடவேண்டும் என்று ஏலதாரர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

Update: 2022-03-07 17:23 GMT
அணைக்கட்டு

பொய்கை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை செயதுவிட்டு ஏலம் விடவேண்டும் என்று ஏலதாரர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பொய்கை வாரச்சந்தை

வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சியில் வாரச் சந்தை நடந்து வருகிறது. இந்த இடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். வாரச்சந்தை நடத்த ஏல தாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வியாபாரிகளிடத்தில் சுங்கவரி வசூல் செய்து வருகின்றனர். ஏலம் எடுக்கும் தொகை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று விடுகிறது. 

கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 200-க்கு ஏலம் போனது. வாரத்திற்கு ரூ.2 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் இடத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமலேயே வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. 2020-ம் ஆண்டு ஏலம் எடுத்தவர்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும்படி அதிகாரிகளை வலியுறுத்தினர். அதன்படி மாவட்ட கலெக்டரும் பொய்கை வாரச்சந்தை ரூ.5 கோடியில் நவீன மயமாக்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்றுவரை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளான மின் விளக்குகள், கழிப்பறை, குடிநீர், காய்கறி வைக்கும் மேடைகள், பொதுமக்கள் நடைபாதை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் தொடர்ந்து வாரச் சந்தை நடந்து வருகிறது. 
இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த சந்தையில் வியாபாரிகள் டார்ச் லைட், எமர்ஜென்சி லைட் உள்ளிட்ட விளக்குகளால் வியாபாரம் செய்து வருகின்றனர். 

முற்றுகை

இதனால் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2022 -23-ம் ஆண்டுக்கான பொய்கை வாரச்சந்தை நடத்துவதற்கான ஏலம் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சதீஷ் குமார் முன்னிலை வகித்தார். 

ஏலம் தொடங்குமுன் ஏலதாரர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பொய்கை வாரச்சந்தையை நவீனமயமாக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில் சாலை மறியல் நடத்தி வந்துள்ளோம். ஆனால் இன்று வரை சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவித்து வருகிறது. மழைக்காலங்களில் மாட்டுச் சந்தையில் கால் வைக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு சேறும் சகதியுமாக மாறி விடுவதால் ஏலத்தை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் இதற்கான மதிப்பீடு செயல் வடிவில் உள்ளது. ஏலத்தை நடத்திவிட்டு பின்பு அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என கூறினார். இதனால் ஆவேசமடைந்த ஏலதாரர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு ஒவ்வொரு வருடமும் இதே போல் கூறி காலம் கடத்தி வருகின்றீர்கள். வாரச் சந்தைக்கு வரும் வியாபாரிகள் சிறுநீர் கழிக்க கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ரூ.1½ கோடி அளவிற்கு ஏலம் விடும் பணத்தை என்ன செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. 
இதனால் தற்காலிகமாக ஏலம் தள்ளி வைக்கப்படுவதாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்