கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா

கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-07 17:03 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை சி.தண்டேஸ்வரநல்லூர் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளிப்பதற்காக திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வரும் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலெக்டர் பாலசுப்பிரமணியமிடம், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

முறைகேடு

சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் நடைபெறாத பல்வேறு பணிகள் செய்யப்பட்டதாக கூறி, போலி கணக்கு எழுதப்பட்டுள்ளது. முறையாக ஒப்பந்தம் கோராமல் ரூ.36 லட்சம் வரை அரசின் பணத்தை லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டது. மரங்கள், குளங்களை குத்தகைக்கு விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் பலமுறை மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்