கடலூரில் 2 மாதங்களுக்கு பிறகு குறைகேட்பு கூட்டம்
கடலூரில் 2 மாதங்களுக்கு பிறகு நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம், பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டு சென்றனர். பின்னர் அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் மார்ச் 7-ந் தேதி (அதாவது நேற்று) முதல் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சுமார் 2 மாதங்களுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
மனுக்கள்
கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 856 மனுக்களை அளித்தனர்.
பின்னர் அந்த மனுக்களை தீர ஆராய்ந்து, அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.