வெளிநாட்டில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
வெளிநாட்டில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்ணாமலைநகர், மார்ச்.8-
சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை கல்யாணி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி இந்துமதி (வயது 43). இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது மகன் அறிவானந்தத்தை சீனாவில் மருத்துவபடிப்பில் சேர்க்க மெடிக்கல் சீட் வாங்கித் தருவதற்காக சிதம்பரம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தர்மசாஸ்தா என்பவரிடம் ரூ.12 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் மேலும் ஒரு நபரிடம் தர்மசாஸ்தா பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அவர்களை தர்மசாஸ்தா சீனாவிற்கு அனுப்பாமல் ஹார்மோனியா நாட்டில் தங்கவைத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த இந்துமதி, தர்மசாஸ்தாவிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது தர்மசாஸ்தா, அவரது தந்தை வேலுச்சாமி, தாய் தமிழ்செல்வி ஆகியோர் இந்துமதியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்துமதி கொடுத்த புகாரின்பேரில் தர்மசாஸ்தா உள்பட 3 பேர் மீது அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.