மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

நத்தம் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.;

Update: 2022-03-07 16:27 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் தங்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இந்த நிலையில் நத்தம் தாலுகா புன்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது எங்கள் பகுதியில் உள்ள மயான பாதை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. அதனை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சார்பில் சிலர் மட்டும் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி கிராம மக்கள் சார்பில் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி உள்பட சிலர் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனு உள்பட 275 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்