பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் 15-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன்பெற வருகிற 15-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-03-07 16:24 GMT

கள்ளக்குறிச்சி, 

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு விவசாய குடும்பத்துக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 10 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

செல்போன் எண்

தற்போது விவசாயிகள் 11-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் தங்களது ஆதார் எண் விவரங்களை பிரதமர் கிசான் திட்ட இணையதளத்தில் உள்ளீடு செய்து ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண்(ஓ.டி.பி.) மூலம் சரிபார்க்கலாம். 

ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களின் மூலம் பிரதமர் கிசான் இணையதளத்தில் தங்கள் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து விவரங்களை சரிபார்க்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.15 பொது இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும்.

15-ந்தேதிக்குள்...

இந்த இருமுறைகளில் ஏதேனும் ஒரு முறையில் விவசாயிகள் தங்கள் ஆதார் விவரங்களை வருகிற 15-ந் தேதிக்குள் திட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்