அரசு ஆஸ்பத்திரி சூறை; 2 வாலிபர்கள் கைது
தரமான சிகிச்சை கேட்டு திருபுவனை அரசு ஆஸ்பத்திரியை சூறையாடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை, மார்ச்.
தரமான சிகிச்சை கேட்டு திருபுவனை அரசு ஆஸ்பத்திரியை சூறையாடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் காயம்
திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் டி.பி.ஜி. நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சுஜித் (வயது 26). அதே ஊரைச் சேர்ந்த அன்பழகன் மகன் அருண்கவி (26). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினர்.
இதில் காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக திருபுவனை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அவர்கள் 2 பேருக்கும் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஆனி (46) முதலுதவி சிகிச்சை அளித்தார்.
ஆஸ்பத்திரி சூறை
இந்தநிலையில் தங்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவர்கள் 2 பேரும் செவிலியரிடம் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை கீழே தள்ளி ரகளை செய்தனர். பின்னர் மருந்து அறைக்கு சென்று அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதை தடுக்க முயன்ற செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
2 பேர் கைது
இந்த தாக்குதல் குறித்து ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் விக்னேஸ்வரன் திருபுவனை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, அஜய்குமார் ஆகியோர் அரசு ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுஜித், அருண்கவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.