கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத்திற்கு குனியமுத்தூர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோபிநாத்தின் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் நேற்று கோவை-பாலக்காடு சாலையில் குனியமுத்தூர் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மூட்டையுடன் மொபட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அவர் குனியமுத்தூரை சேர்ந்த கொம்பரசன் என்ற கார்த்திக் (32) என்பதும், 200 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கார்த்திக் அவரது நண்பர் பிச்சைமுத்து (42) என்பவருடன் சேர்ந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவுக்கு கடத்தியது சென்று தெரியவந்தது.
இதையடுத்து பிச்சைமுத்துவை பிடித்து, அவர் பதுக்கி வைத்திருந்த 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் ரேஷன் அரிசியை கடத்தியதாக கார்த்திக், பிச்சைமுத்துவை போலீசார் கைது செய்தனர்.