கந்துவட்டி கொடுமையை தடுக்க கோரி கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டியவாறு வந்த ஆட்டோ டிரைவரால் பரபரப்பு

கந்து வட்டி கொடுமையை தடுக்க கோரி மண்எண்ணெய் பாட்டிலுடன் தம்பதியும், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு ஆட்டோ டிரைவரும் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-07 16:04 GMT
கோவை

கந்து வட்டி கொடுமையை தடுக்க கோரி மண்எண்ணெய் பாட்டிலுடன் தம்பதியும், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு ஆட்டோ டிரைவரும் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

குறைதீர்ப்பு கூட்டம்

கொரோனா பரவல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடக்கும் குறைதீர்ப்பு கூட்டம் கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. 

தற்போது தேர்தல் முடிந்ததாலும், கொரோனா பரவல் குறைந்ததாலும்  குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். 

கந்துவட்டி கொடுமை

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் என்பவர் கழுத்தில் தூக்கு மாட்டுவதுபோல் கயிறு மாட்டிக்கொண்டு வந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கயிறை அகற்றினர். 

பின்னர் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது பாட்டிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி அதற்காக மாதம் ரூ.1,500 வட்டி செலுத்தி வந்தேன். 

இதுவரை ரூ.85 ஆயிரம் செலுத்தி உள்ளேன். தற்போது கடன் கொடுத்தவர் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தி பத்திரத்தை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டுகிறார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

மண்எண்ணெய் கேனுடன் வந்த தம்பதி

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த செல்வம் -ராஷ்மி தம்பதி யினர் தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் நிரப்பிய பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தனர். உடனே அவர்களிடம் போலீசார் மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். 

அவர்கள் அளித்த மனுவில், நாங்கள் வாங்கிய கடனுக்கு அடமானமாக காலிமனை பத்திரத்தை கொடுத்தோம். தற்போது அந்தப் பணத்திற்கு கூடுதலாக கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர், என்று உள்ளது.

கோவை மாவட்ட என்.டி.சி ஆலை தொழிலாளர்கள் அளித்த மனுவில், கொரோனா காரணமாக மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகள் இதுவரை திறக்கவில்லை. பல போராட்டமும் நடத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என கூறியிருந்தது.

தர்ணா 

கோவை ஆர்.எஸ்.புர‌ம் ப‌குதியை சேர்ந்த 65 வயதான ஜெக‌நாத‌ன் தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 அவர்கள் அளித்த மனுவில், எனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் வாடகையை ஒழுங்காக கொடுப்பது இல்லை. ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வீட்டை காலி செய்யவில்லை. 

இது குறித்து கேட்டால் அரசியல் பிரமுகர்களை வைத்து மிரட்டி வருகிறார். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தது. 

மேலும் செய்திகள்