வடமாநில வாலிபர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவியின் மகன் கைது
திருவள்ளூர் அருகே தொழிற்சாலையில் பணிபுரிந்த வடமாநில வாலிபர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவியின் மகன் கைது செய்யப்பட்டார்.;
ஒப்பந்ததாரர்கள்
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களில் ஊழியர்களை பணியமர்த்துவதில் 6 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ஒப்பந்தம் செய்து அதிக அளவில் வடமாநில இளைஞர்களை பணியமர்த்தி வந்துள்ளார். இதற்கு கீழச்சேரி பகுதியை சேர்ந்த முகேஷ் மற்றும் பிரபு ஆகிய இருவரும் கூடுதலாக தங்களுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தொழிற்சாலை அதிகாரியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஓர் ஆண்டுக்கு பிறகு தருவதாக தெரிவித்துள்ளார்.
வடமாநிலத்தவர் மீது தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ் மற்றும் பிரபு ஆகியோர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த டிசம்பர் மாதம் வடமாநில இளைஞர்கள் தங்கி உள்ள பேரம்பாக்கம் பகுதிக்கு சென்று அவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் அப்துல் அசின் என்ற வடமாநில இளைஞர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மேற்பார்வையில் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் தொடர்புடைய முகேஷ் (27), பிரபு (33), தினேஷ் (29), சிமியோன் (21), திவாகர் (25), ராஜேஷ் (29), தினேஷ் (24), சூர்யா (29), முகேஷ் (24), பிரகாஷ் (19) ஸ்டீபன் (29) ஆகிய 11 பேரையும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.
ஊராட்சிமன்ற தலைவியின் மகன் கைது
மேலும் வடமாநில இளைஞர்களை அடித்து துரத்தி விட்டால் மொத்த பணியாளர்களையும் நாம் வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி வடமாநில இளைஞர்களை தாக்க தூண்டிவிட்டதாக இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை மப்பேடு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கீழச்சேரி ஊராட்சிமன்ற தலைவி தேவிகலா ஆரோக்கியசாமி மகன் தேவா ஆரோக்கியம் (25) என்பவரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.