‘நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான்’ என கலெக்டரிடம் கூறிய சிறுவன்

நாகையில் நடந்த மகளிர் தின விளையாட்டு போட்டியில் ‘நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான்’ என கலெக்டரிடம் ஒரு சிறுவன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2022-03-07 15:39 GMT
நாகப்பட்டினம்:
நாகையில் நடந்த மகளிர் தின விளையாட்டு போட்டியில் ‘நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி’ தான் என கலெக்டரிடம் ஒரு சிறுவன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகளிர் தின போட்டி
நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் தினத்தையொட்டி அரசு துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாகை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே எறிபந்து போட்டி நடந்தது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர், தனது 4 வயது மகன் கவினையும் விழாவுக்கு அழைத்து வந்திருந்தார். போட்டியில் கலந்து கொண்டவர்களின் பெயர் விவரங்களை கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டு கொண்டிருந்தார்.
நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் என கூறிய சிறுவன்
அப்போது கலெக்டரை பார்த்து தாயுடன் நின்று கொண்டிருந்த சிறுவன் கவின், வணக்கம் சார்... என்று கலெக்டரை பார்த்து சத்தமாக கூறினான். உடனே கலெக்டரும் வணக்கம் என்று சிறுவனை பார்த்து கூறினார். இதையடுத்து சிறுவன் கவின், நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் என்று கலெக்டரிடம் கூறினான்.
சிறுவனின் மழலைச்சொல்லால் அதைக் கேட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மகிழ்ச்சியடைந்தார். பின்னர் சிறுவனின் அருகில் சென்று யாருடா தம்பி நீ...? கலெக்டர் ஆகி என்ன செய்யப்போற? என்று சிறுவனிடம் கேட்டார். அதற்கு அந்த சிறுவன், நான் கலெக்டராகி உங்களைப்போல் நடந்து கொள்வேன் என்று பதிலளித்தான்.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
இதனைத்தொடர்ந்து அந்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்த கலெக்டர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இதுகுறித்து சிறுவன் கவினின் தாயார் கூறுகையில்,  எனக்கு சிறுவயதில் இருந்தே கலெக்டராக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் என்னால் கலெக்டராக முடியவில்லை.
கலெக்டர் ஆவேன் என்று அடிக்கடி கூறுவான்
உன்னை கலெக்டர் ஆக்க முடியவில்லையே என என்னிடம் அடிக்கடி கூறி எனது தாய் வருத்தப்படுவார். இதனைக்கேட்ட எனது மகன் கவினும், நான் கலெக்டர் ஆவேன் என அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பான். எனது பெயர் கவின் ஐ.ஏ.எஸ். என்றும் கூறிக்கொள்வான்.
எனது மகன், நாகை கலெக்டரிடம் எதார்த்தமாக பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்