தேனி கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதத்துக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கனிமவள கொள்ளையை தடுக்க பா.ஜ.க.வினர் கோரிக்கை மனு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதத்துக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-03-07 14:22 GMT
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதிக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2 மாத இடைவெளிக்கு பிறகு நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 303 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கண்பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் கைபேசி (ஸ்மார்ட் போன்) வழங்கும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் செல்போன்கள் வழங்கப்பட்டன.
கனிமவள கொள்ளை
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி தலைமையில், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் அஜித்குமார் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், "தேனி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிகற்கள், உடைகற்கள் போன்றவை அதிகஅளவில் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தினமும் சுமார் 500 யூனிட் வரை கனிமவளங்கள் கேரளாவுக்கு செல்கின்றன.
கேரள மாநிலத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால் தேனி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழக்கக்கூடிய அபாயம் உள்ளது. கேரள மாநிலத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் எந்த வகையில் அனுமதி வழங்கியுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கேரளாவுக்கு செல்லும் கனிம வளங்களை கண்காணித்து, கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்