குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி நீரில் மூழ்கி பலி

குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி நீரில் மூழ்கி பலி

Update: 2022-03-07 13:39 GMT
கோத்தகிரி

கோத்தகிரி தாலுகா அரவேனு அருகே உள்ள சக்கத்தா கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன்(வயது 38). இவருக்கு திருமணமாகி ரஞ்சனி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் உள்ளனர். கூலித்தொழிலாளியான ரவீந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் இன்று மதியம் 1 மணியளவில் குடிபோதையில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றுக்கு பக்கத்தில் நடமாடி கொண்டு இருந்தார்.  அப்போது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். 

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் கோத்தகிரி போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கி ரவீந்திரன் உயிரிழந்தார். பின்னர் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்