ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்- கிராம மக்கள்
சீர்காழி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:-
சீர்காழி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரமற்ற அரிசி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார், மங்கைமடம், எலத்தூர், திருப்புங்கூர், ஆதமங்கலம், பெருமங்கலம், காரைமேடு, கதிராமங்கலம், மாதானம், ஆச்சாள்புரம், நல்லூர், புதுப்பட்டினம், புத்தூர், புங்கனூர், எடமணல், திருமுல்லைவாசல், புதுப்பட்டினம், தென்னாம்பட்டினம், வானகிரி, கீழமூவர்க்கரை உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கடந்த ஓராண்டாக தரமற்றதாக இருப்பதாகவும், அரிசியை சமைத்து உண்ண முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது. இதை கீழே கொட்டினால் அதை சாப்பிடும் கால்நடைகள் இறந்து விடுகின்றன. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற பின்னரும் ரேஷன் அரிசி தரமற்றதாகவே உள்ளது.
எனவே ரேஷன் அரிசியை தரமானதாக வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.