மத்திய மந்திரி நாராயண் ரானேக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்

மத்திய மந்திரி நாராயண் ரானே பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2022-03-07 13:12 GMT
படம்
மும்பை, 
மத்திய மந்திரி நாராயண் ரானே பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பங்களாவில் அதிகாரிகள் ஆய்வு
மராட்டியத்தில் ஆளும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கும் கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இதில் பா.ஜனதா மூத்த தலைவரான மத்திய மந்திரி நாராயண் ரானேவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 
கடந்த ஆண்டு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை கன்னத்தில் அறைவேன் என கூறியதற்காக மத்திய மந்திரி நாராயண் ரானே கைது செய்யப்பட்டார். இதேபோல அவரது மகன் நிதேஷ் ரானே எம்.எல்.ஏ.வும் சிவசேனா நிர்வாகி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். 
மேலும் பெண் ஒருவர் தற்கொலையில் அவதூறு பரப்பியதாக நாராயண் ரானே, நிதேஷ் ரானே இருவர் மீதும் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை போலீஸ் நிலையத்தில் ஆஜரான நாராயண் ரானே சுமார் 9 மணி நேரத்திற்கு பிறகே விடுவிக்கப்பட்டார். 
சட்டவிரோத கட்டுமான பணி
இந்தநிலையில் சமீபத்தில் மும்பை ஜூகு பகுதியில் உள்ள மத்திய மந்திரி நாராயண் ரானேவின் ‘ஆதிஷ்' கடலோர பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் அந்த பங்களாவில் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் அவர்கள் மத்திய மந்திரி நாராயண் ரானே பங்களாவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், உங்கள் வீட்டில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான பணிகளை நாங்கள் ஏன் அகற்ற கூடாது என்பதற்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
நாராயண் ரானேயின் 8 மாடி பங்களாவில் 7-வது மாடி தவிர மற்ற அனைத்து தளங்களிலும் சட்டவிரோதமாக பணிகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
----

மேலும் செய்திகள்