ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள்- கலெக்டர் லலிதா

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என கலெக்டர் லலிதா கூறினார்.

Update: 2022-03-07 18:45 GMT
மயிலாடுதுறை:-

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என கலெக்டர் லலிதா கூறினார். 
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லலிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தண்ணீர் குழாய்கள்

தாட்கோ மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகள் தங்கள் நில மேம்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் பி.வி.சி. தண்ணீர் குழாய்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் இருக்க வேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். 

ஆண்டு வருமானம்

தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கனவே, தாட்கோ திட்டத்தில், நிலம் வாங்குதல், மேம்படுத்தும் திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் போன்றவற்றில் பயன் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் துரிதமின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
வேளாண் துறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட வகை பி.வி.சி. தண்ணீர் குழாய்கள் கொள்முதல் செய்யவேண்டும். வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறையில் பி.வி.சி. குழாய்கள் வாங்க மானியம் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது. எனினும் ஏற்கனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியத்திட்டத்தில் அல்லது வேளாண், தோட்டக்கலை திட்டத்தில் மின் மோட்டார், டீசல் பம்பு மானியம் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இணையதள முகவரி

விண்ணப்பதாரர் சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்பஅட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, புகைப்படம், பட்டா, சிட்டா, அடங்கல், ‘அ' பதிவேடு, புலப்பட வரைபடம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றுடன், ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ இணையதளமான http://application.tahdco.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 611003 என்ற அலுவலக முகவரியில் நேரில் சென்று விவரம் அறியலாம். 04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்