ரூ.7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டு லாரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.7 கோடி செம்மரக்கட்டைகள்
சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமரனுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. சென்னை புழல்-அம்பத்தூர் சாலையில் இருக்கும் கன்டெய்னர் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி ஒன்றில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த செம்மரக்கட்டைகளை ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பதற்கு பேரம் நடப்பதாகவும் அந்த ரகசிய தகவலில் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு குமரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சாகுல்அமீது, ராம்குமார் மற்றும் ஏட்டு சுரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் குறிப்பிட்ட கன்டெய்னர் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் சோதனை போட்டனர்.
அந்த லாரியில் சுமார் 5 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி ஆகும். அவற்றை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர். சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் அவற்றை கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்தது.
2 பேர் கைது
துணை சூப்பிரண்டு குமரன், அந்த செம்மரக்கட்டைகளை புழல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். வனத்துறை அதிகாரிகளும் இது குறித்து நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்கள். புழல் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த செம்மரக்கட்டைகள் பதுக்கல் தொடர்பாக லாரி டிரைவர் முத்துசாமி (வயது 48) மற்றும் அம்பத்தூர் புதூரைச்சேர்ந்த சேவியர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.