இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
சீர்காழியில் இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
சீர்காழி:-
சீர்காழியில் இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விழிப்புணர்வு பிரசாரம்
இணையவழி மோசடி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. சைபர் கிரைம் போலீசார் சார்பில் நடந்த இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் கடை உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இணையத்தின் வாயிலாகவோ, செல்போன் வாயிலாகவோ சுய விவரங்களை யாரேனும் கேட்டால் பகிர கூடாது. முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பராக்கி கொள்ள கூடாது.
தகவல் தெரிவிக்கலாம்
ஏ.டி.எம். கார்டு, ஆதார் அட்டை எண் உள்ளிட்டவற்றை யாரிமும் தெரிவிக்க கூடாது. வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை அழைத்து சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதைத்தொடர்ந்து இணையதள மோசடியில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.