மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சாப்ட்வேர் என்ஜினீயர் மயங்கி விழுந்து சாவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சாப்ட்வேர் என்ஜினீயர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் காதர்மொய்தீன் (வயது 41). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், போரூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், தனது மனைவி லாசிமின், மகன் சமீர் (10) ஆகியோருடன் நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார்.
காதர்மொய்தீன் மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் 10 கிலோமீட்டர் தூரம் ஓடியதாக தெரிகிறது. அதன் பின்னர் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காதர்மொய்தீன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.