மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர் அருகே மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றதால், கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-07 10:55 GMT
பரமத்திவேலூர்:
கூலித்தொழிலாளி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராமு. இவருடைய மகன் வினோத் என்கிற சண்முகமூர்த்தி (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும் கரூர் மாவடம் வாங்கலை சேர்ந்த கண்ணியம்மாள் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நிஷாலினி (2) என்ற குழந்தை உள்ளது.
வினோத் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி அருந்ததியர் காலனியில் மனைவி, மகளுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கோபித்து சென்ற மனைவி
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், கண்ணியம்மாள் கோபித்து கொண்டு, வாங்கலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகளுடன் சென்று விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக வினோத் விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும், அவர் கண்ணியம்மாளை குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
 இந்தநிலையில் நேற்று வெகுநேரமாகியும் வினோத் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், வினோத் பிணமாக தொங்கினார். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர்கள் பரமத்திவேலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, வினோத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்