வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம்
வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம்
சேவூர் அவினாசி சாலை கோபி, புளியம்பட்டி, சத்தி, மைசூரு ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினசரி 1000க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள், தனியார் பள்ளிவாகனங்கள் செல்வது வழக்கம். மேலும் பின்னலாடை தொழில் நகரமாக விளங்கும் திருப்பூர் அருகாமையில் உள்ளதால் 200 க்கும் மேற்பட்ட பனியன் நிறுவன வாகனங்கள் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்று வருகிறது.
இவை கோபி சாலை வழியாகவும், சத்தி சாலை வழியாகவும் தனித்தனியாக வந்து சேவூர் கைகாட்டி ரவுண்டானாவிலிருந்து ஒன்று சேர்ந்து போட்டி போட்டு கொண்டு சேவூரிலிருந்து அவினாசி சாலை வழியாக செல்கிறது. இவை காலை, மாலை, இரவு நேரங்களில் சென்று வரும் போது அதிவேகமாக செல்வதாலும், ஒன்றை ஒன்று முந்தி செல்வதாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அன்றாடம் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகிறார்கள்.
வேகத்தடை
இவ்வாறு அதிவேகமாக, விதியை மீறி சென்று வரும் வாகனங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இருபுறமும் வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் போது எதிரே வரும் வாகனத்தின் மீது மோதி கொள்ளாமல் இருக்க சாலையின் நடுவே தடுப்புச் சுவர் (சென்டர் மீடியா) அமைக்க வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
----