மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்த வாலிபரை கொன்று உடல் எரிப்பு - நண்பர் கைது

பெலகாவியில், மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை கொன்று உடலை எரித்த நண்பர் கைது செய்யப்பட்டு உள்ளார்.;

Update: 2022-03-06 21:56 GMT
பெலகாவி:

வாலிபர் உடல் மீட்பு

  பெலகாவி தாலுகா கனகரகி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென தீப்பிடித்தது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அப்போது தீயில் சிக்கி உடல் கருகிய நிலையில் ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். அவரது உடலை மாலமாருதி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபர் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியாமல் இருந்தது.

  இதற்கிடையே நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்திற்கு வேண்டும் என்றே யாரோ தீ வைத்து இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். இதனால் அந்த நிலத்திற்கு வரும் வழியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் நிலத்தை நோக்கி செல்லும் காட்சியும், சிறிது நேரத்தில் ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளில் திரும்பி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்

  அந்த காட்சிகளின் அடிப்படையில் கனகரகி கிராமத்தை சேர்ந்த பரசுராம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனது நண்பரை கொலை செய்து அவரது உடலை எரித்ததை பரசுராம் ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

  அதாவது பரசுராமும், மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் சிந்தகடா பகுதியில் வசித்து வந்த சந்தோசும் நண்பர்கள் ஆவார். இதனால் சந்தோஷ் வீட்டிற்கு பரசுராம் அடிக்கடி சென்று வந்து உள்ளார். அப்போது பரசுராமுக்கும், சந்தோசின் மனைவி சந்தியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்த பின்னர் பரசுராமிடம், சந்தோஷ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சந்தோசை தீர்த்துக்கட்ட பரசுராம் முடிவு செய்தார்.

துண்டால் கழுத்தை இறுக்கி கொலை

  அதன்படி கடந்த 1-ந் தேதி சந்தோசை சந்திக்க கனகரகி கிராமத்திற்கு பரசுராம் வரவழைத்தார். பின்னர் 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்து உள்ளார். போதை தலைக்கு ஏறியதும் சந்தோஷ் நிலைதடுமாறியுள்ளார். இதன்பின்னர் சந்தோசை மோட்டார் சைக்கிளில் ஏற்றிகொண்டு நிலத்திற்கு சென்ற பரசுராம், அங்கு வைத்து சந்தோசின் கழுத்தை துண்டால் இறுக்கி படுகொலை செய்துள்ளார். பின்னர் நிலத்தில் அவரது உடலை வீசிவிட்டு உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உள்ளார்.

  அந்த தீ விவசாய நிலத்தில் உள்ள பயிர்கள் மீது பரவி எரிந்ததும் பரசுராம் தப்பி வந்து விட்டார். நிலத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி சந்தோஷ் இறந்து விட்டதாக போலீசாரை நம்ப வைக்க அவர் இந்த செயலில் ஈடுபட்டதும் அம்பலமாகி உள்ளது. கைதான சந்தோசிடம் இருந்து அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொலையில் சந்தோசின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். கைதான பரசுராம் மீது மாலமாருதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்