சேலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயற்சி-130 பெண்கள் உள்பட 702 பேர் கைது
சேலத்தில் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனால் 130 பெண்கள் உள்பட 702 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலத்தில் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனால் 130 பெண்கள் உள்பட 702 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் குவிப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடக்க தினத்தையொட்டி சேலத்தில் நேற்று ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஊர்வலத்துக்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பைரோஸ் கான் தலைமையில் ஏராளமானவர்கள் லால் மகால் மேட்டுத்தெரு முன்பு குவிந்தனர்.
இதையொட்டி ஏற்கனவே அங்கு போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமையில் துணை கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி ஆகியோர் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஆற்றோர காய்கறி மார்க்கெட், சுகவனேசுவரர் கோவில் ஆகிய பகுதிகளில் போலீசார் தடுப்பு கம்பிகள் வைத்து பாதையை அடைத்தனர்.
ஊர்வலம் செல்ல முயற்சி
இதையடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா, பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுச்செயலாலர் அகமது நவவி மற்றும் நிர்வாகிகள் பேசினர். அதைத்தொடர்ந்து போலீஸ் தடையை மீறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
இதனால் போலீசார் அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி சேலம் டவுன், கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களுக்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே சேலம் கலெக்டர் அலுவலகம் மற்றும் முள்ளுவாடி ரெயில்வே கேட் ஆகிய பகுதிகளில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.
702 பேர் கைது
பின்னர் அவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஊர்வலம் செல்ல முயன்ற மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 130 பெண்கள் உள்பட 702 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.