குண்டேரிப்பள்ளம் அணை அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட சுற்றி திரிந்த 2 பேர் கைது; நாட்டு துப்பாக்கி-கத்தி பறிமுதல்

குண்டேரிப்பள்ளம் அணை அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-06 21:47 GMT
டி.என்.பாளையம்
குண்டேரிப்பள்ளம் அணை அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டு துப்பாக்கியுடன்...
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை அருகே வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் சிலர் நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட சுற்றி திரிவதாக டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் நேற்று குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்ததை பார்த்தனர்.
2 பேர் கைது
வனத்துறையினரை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கொங்கர்பாளையத்தை சேர்ந்த சங்கர் (வயது 36), வினோபாநகரை சேர்ந்த குமார் (25) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் வனப்பகுதியில் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், டார்ச் லைட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்