ஒரே நாளில் 14 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது- சுகாதாரத்துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2022-03-06 21:47 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவுதலை தடுக்கும் பொருட்டு, அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன் இல்லம் தேடி தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்பட 433 மையங்களில் நடந்தது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) இலவசமாக செலுத்தப்பட்டது.
14,487 பேருக்கு...
மேலும் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்ற இடங்களில் செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1,732 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். 66 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் நடந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி 1,046 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 13 ஆயிரத்து 132 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 309 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 14 ஆயிரத்து 487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், 2-ம் தவணை தடுப்பூசியை 12 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பூஸ்டர் தடுப்பூசியை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் செலுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்