கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்தபோது பரிதாபம்; ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
கோபி அருகே கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்த வாலிபர் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
டி.என்.பாளையம்
கோபி அருகே கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்த வாலிபர் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
சுற்றுலா வந்தனர்
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. அவருடைய மகன் யோகேஸ் (வயது 33). இவர் கோவையில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் யோகேஸ், அவருடன் வேலை செய்யும் நண்பர்கள் 19 பேர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து வாடகைக்கு வேன் ஒன்றை அமர்த்தினர். இந்த வேனில் யோகேஸ் மற்றும் 19 பேர் நேற்று மதியம் கொடிவேரி அணைக்கு சுற்றுலாவாக வந்தனர்.
சுழலில் சிக்கினார்
இதைத்தொடர்ந்து அனைவரும் கொடிவேரி அணையை சுற்றி பார்த்தனர். பின்னர் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு சென்றனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றது. இதனால் அனைவருக்கும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே ஆற்றில் இறங்கினர்.
இதில் யோகேசின் நண்பர்கள் ஆற்றின் கரையில் நின்று குளித்தனர். யோகேஷ் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அந்த இடம் சுழல் அதிகமாக காணப்பட்டது. மேலும் அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதனால் யோகேஷ் சுழலில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.
சாவு
இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்”் என்று சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் யோகேசை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் யோகேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதற்கிடைேய தகவல் கிடைத்து பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து யோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.