ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல்
ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழுதாகி நின்ற லாரி
ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த நுழைவு பாலத்தின் வழியாக மொடக்குறிச்சி, கொடுமுடி, கரூர், மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள், கார்கள், இருசக்கரவாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.
இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த நிலையில் நேற்று காலை மணல் பாரம் ஏற்றிக்கொண்டு இந்த வழியாக சென்ற ஒரு லாரி திடீரென பழுதாகி நின்றது.
போக்குவரத்து நெரிசல்
இதனால் கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றது.
இதைத்தொடர்ந்து அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் பழுதாகி நின்ற லாரி மீட்பு வாகனம் மூலம் இழுத்து செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் மெதுவாக செல்ல தொடங்கியது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, ‘கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.