மைசூருவில் ரூ.81 கோடியில் கோளரங்கம்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

மைசூருவில் ரூ.81 கோடியில் கோளரங்கத்துக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-03-06 21:27 GMT
பெங்களூரு:

மைசூருவில் கோளரங்கம்

  மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் மைசூரு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் ரூ.81 கோடி செலவில் புதிதாக கோளரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கோளரங்க கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:-

  மைசூருவில் பல மொழிகள் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். மைசூரு நகரில் கோளரங்கம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி தற்போது மைசூருவில் கோளரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நான் கர்நாடகத்தில் இருந்து தான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அதனால் கர்நாடகத்திற்கு என்னால் முடிந்த வளர்ச்சி பணிகளை செய்யவேண்டுமென்று பல நாள் ஆசைப்பட்டேன். அந்த தற்போது நிறைவேறியுள்ளது.

ரூ.81 கோடி திட்டம்

  மத்திய மந்திரியின் நிதியில் இருந்து ரூ.81 கோடியை ஒதுக்கீடு செய்து இந்த மைசூரு கோளரங்கத்தை கட்ட இருக்கிறோம். அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்திற்குள் கோளரங்கம் கட்டும் பணிகள் முடிவடையும். இதை யாரும் வெறும் கோளரங்கமாக நினைக்கவேண்டாம். இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு பல்கலைக்கழகமாக பார்க்கவேண்டும். டெல்லி கோளரங்கத்தில் இருந்து வான்வெளி வாயிலாக லடாக்கின் இயற்கை காட்சிகளை பார்க்க முடியும். அந்த வசதிகள் மைசூரு கோளரங்கில் கொண்டுவரப்படுகிறது.

  இதை வரும்கால விஞ்ஞானிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதன் வாயிலாக புவி ஈர்ப்பு அலைகள், வானிலை ஆய்வுகள் உள்பட பல்வேறு மெகா தரவுகளை பெற முடியும். இதன் மூலம் இளம் விஞ்ஞானிகளுக்கு நான் கூற விரும்புவது, தரவுகள் (டேட்டா) ஒரே இடங்களில் குவிய கூடாது. அவை அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கவேண்டும். அதற்கு இந்த கோளரங்கம் மிகவும் உதவியாக இருக்கும்.
  இவ்வாறு அவர் பேசினார்.
  ---

மேலும் செய்திகள்