‘‘6 நாட்கள் மரண பயத்துடன் சுரங்கத்தில் பதுங்கி இருந்தோம்’’
ரஷியா போர் தொடுத்து வரும் உக்ரைனில் 6 நாட்கள் மரண பயத்துடன் சுரங்கத்தில் பதுங்கி இருந்தோம். இந்தியர்களை மீட்பதில் எந்த பாகுபாடும் காட்டவில்லை என குமரி திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர்
நாகர்கோவில்:
ரஷியா போர் தொடுத்து வரும் உக்ரைனில் 6 நாட்கள் மரண பயத்துடன் சுரங்கத்தில் பதுங்கி இருந்தோம். இந்தியர்களை மீட்பதில் எந்த பாகுபாடும் காட்டவில்லை என குமரி திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர்
குமரி மாணவர்கள்
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியா முக்கிய நகரங்களை கைப்பற்ற தினமும் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 மாணவர்கள் நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்தனர்.
வரவேற்பு
அதாவது, நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த பிரீத்தி கங்கா (வயது 20), அருமனையை சேர்ந்த அபின் (22) மற்றும் களியக்காவிளையை சேர்ந்த மெர்லின் ஜெபா (19) ஆகியோர் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். உக்ரைனில் இருந்து மும்பை வந்த அவர்கள் நேற்று தூத்துக்குடிக்கு விமானம் மூலமாக வந்தனர்.
இதனை அறிந்த அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடியில் இருந்து 3 பேரையும் தனது காரில் அழைத்து வந்தார்.
சுரங்கத்தில் பதுங்கல்
குமரி மாவட்டம் வந்த மாணவர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கும், அமைச்சர் மனோ தங்கராஜூக்கும் நன்றி தெரிவித்தனர். முன்னதாக மாணவர்கள் போர் களத்தில் சிக்கி பட்டபாடுகள் குறித்து கூறியதாவது:-
நாங்கள் உக்ரைனில் கருங்கடல் பகுதியில் உள்ள பெட்ரோ மொபைலியா ப்ளக்சி என்ற நேசனல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறோம். உக்ரையின் மீது ரஷியா போர் தொடங்கியதும் நாங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான சுரங்கத்தில் தங்கிக் கொண்டோம். எங்களுடன் மேலும் பல இந்திய மாணவர்களும் இருந்தனர்.
மரண பயத்தில்...
முதல் 3 நாட்கள் உணவுக்காக வெளியே வந்தோம். ஆனால், போர் தொடங்கிய 3-வது நாளில் இருந்து நாங்கள் இருந்த பகுதியிலும் ரஷியா குண்டுகளை வீசியது. இதனால், பதற்றத்தில் இருந்தோம்.
எப்போது வேண்டுமானாலும் எங்கள் மீதும் குண்டு விழுந்து விடுமோ என்ற மரண பயத்தில் ஒவ்வொரு நிமிடங்களையும் கழித்தோம். மொத்தம் 6 நாட்கள் வரை சுரங்கத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் எங்களுக்கு தேவையான உணவு தடையில்லாமல் கிடைத்து வந்தது.
பாகுபாடு காட்டவில்லை
இதற்கிடையே இந்திய தூதரகம் எங்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. முதலில் நாங்கள் தஞ்சமடைந்திருந்த சுரங்கப்பாதையில் இருந்து பஸ் மூலமாக வால்ட்டோவுக்கு அழைத்து சென்றார்கள். பின்னர், அங்கிருந்து ருமேனியா என்ற நாட்டுக்கு விமானம் மூலமாக அழைத்து செல்லப்பட்டோம். அங்கிருந்து தாயகம் திரும்பினோம். உக்ரைனில் இந்தியர்களை மீட்பதில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. நாங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சொந்த ஊர் திரும்பி உள்ளோம். இப்போது தான் நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.